நிலவு
(கவிதைகள்)
- சு.ராஜசெல்வி-
(1)
வண்ண
வண்ண பூச்சி
வண்ணாத்திப்பூச்சி
உண்ண
உண்ண பறந்து
பூ
மீது மென்மையாக இருந்து
எண்ணமெல்லாம்
நிறைந்து
கள்ளமில்லாமல்
அருந்தும்
தேனை
கள்ளமில்லாமல் அருந்தும்
அழகு
கோடி தானடா
செந்நிறப்பூவே
மண்ணின்
குமிழ் அழகே
கொள்ளை
உன் அழகால்
வண்ண
பூச்சிதனையும்
கொள்ளையடித்தாயே
பூவும்
வண்ண பூச்சியும்
இணையும்
கணமே காதல்
நிலவின்
ஒளியில் ஒரு கூடல்
(2)
நிலா முழுநிலா பால்நிலா
முட்டைப்பொரியலாய்
அம்மா குழைக்கும் சோற்றுருண்டையாய்
வயிறு பசிக்கையில் நீ நிறைவாய்
நிலாவே !
நீ ஒளிதந்தாலும் சுடுவதில்லை
என் தனிமையிலும் துணை இருப்பாய்
என் கவலைகளை ,கண்ணீரை
நீ அறிவாய்
நிலவாகிய பெண்ணவள்
கனவாகிய அவனவள்
கலையாகிய தாயவள்
வையகத்தின் தலைமகள்
பெண் நிலவாகலாம்
நிலவு பெண் அல்ல
நிலவு இரவல் ஒளி
பெண் பேறு
(3)
ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்னுத்தாயி
கூறைக்கரையின் அழகாய் வாய் சிவந்தவளே என் தாயி
என் நெஞ்சை
வாரிக்கொண்டையிட்டு போறியே சின்னத்தாயி
நாரி ஒடிந்துவிடும் மெல்ல நட அன்புத்தாயி
ஆடு மாடு அழகெல்லாம் சூழ்ந்துவருகுது
அது எல்லாம் உன் முன் வீழ்ந்து வணங்குது
அணங்கு நீ அசைந்து அசைந்து செல்லும் அன்னம்
உன்வதனம் பூக்கும் பூவே காதலின் சின்னம்
உந்தன் கண்கள் வானவில்லாய் மின்னும்
பண்ணும் பாட்டும் உன் வண்ணம்
ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்னுத்தாயி
களனி எல்லாம் செழிப்பாக்கி செல்லும் தாயி
எக் கணனியுகத்திலும் நீயேதான் ராணி
என் கனவு நனவெல்லாம் உயிரே நீயே
என் ஆயுளின் நீளம் உன் கையில் தாயே
ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்னுத்தாயி
என் இதயத்தையும் பிடுங்கி போறாயே கண்ணுத்தாயி
(4)
வெள்ளைத்தாமரைகள் இடும் பூக்கோலம்
வெண்புறாக்கள் போல் நளினமிடும்
காணக் கண் இரண்டு போதாது
பௌர்ணமி நிலவில் ஒளிரும்
அகல்விளக்கு - அது
மனங்களை வெளிச்சமிடும்
அகவிளக்கு
பார் எங்கும் திருவோணம் திருவிழா
ஊரே ஒன்றாகும் நல்விழா
காரிருள் அகழும் மனவிழா
ஆவணி மாத பெருவிழா
(5)
தமிழ் செந்தமிழ்
இயல் இசை நாடகம் என
விரியும் முத்தமிழ்
என்றும் இளமையாய்
பைந்தமிழ்
தரணியின் மூத்தகுடியின் மொழி
தீ ,மை, வை என
ஒரு சொல்லில் பொருள் தரும்
ஒரேமொழி
உலகின் தனிமொழி
தித்திக்க பேசலாம்
திகட்டாமல் எழுதலாம்
தத்தி வரும் மழலையும்
பொக்குவாய் முதியோரும்
பேசும் ஓசை கேற்க வரும் வரம்
கனிவுக்கு ஒரு இதமும்
மேடைக்கு ஒரு பதமும்
கவலைக்கு ஒரு இடமும்
சினத்திற்கு ஒரு விதமும்
மகிழ்விற்கு ஒரு மோதகமாய்
இனிக்கும் எம்தாய்மொழி
தமிழ்மொழியாம் செம்மொழி
விழிகள் இரண்டு
மொழியோ ஒன்று
அதுவே உயிரிழை என்று
போடடா சபதம் இன்று
(6)
அன்று
கண்கள் தூண்டில்களாக
இதயங்கள் சிக்கின
இன்று
தூண்டில் மீனாய்
துடிக்கிறது "தனிமை"
காதல்
நூலறுந்த பட்டமாயிற்று
வாழ்தல்
தீ மிதிப்பாயிற்று
துயில் இல்லை
கனவும் இல்லை
நினைவு முழுதும் அவளே
மழை இல்லை
நனைகிறேன் கண்ணீரால்
வானில் அவள் நிலாவாய்
பூமியில் நான்
( 7)
முள்ளில்லா ரோஜா
நவீன உலகில் முள் துணை அற்றும்
நிமிர்ந்து வாழும் ரோஜா
கன்னக்குழிபோல் மொட்டு முகிழ
புன்னகையாய் விரியும் ரோஜா
பூவுலகில் ராஜா
நிறம் நிறமாய்
விதம் விதமாய்
மனம் நிறையும் அழகு
காற்றில் வாசம் கலக்க
சுற்றமே கரையும் ஈர்ப்பில்
முள்ளில்லா ரோஜாவிலும்
கள் உண்டு
கள் உண்டு மண் கவிழ்ந்த
மன்னவர்களும் உண்டு
விண் தொட்ட வறியோரும் உண்டு
இதழ்கள் ஒன்று கூடி ரோஜாவாகிறது
செக்கச் சிவந்த ரோஜா
காதலின் தூது
வெள்ளை ரோஜா
துக்க நிகழ்வில் அடைமொழி
செடியில் ரோஜாவின் ஆயுள்
பறிப்பதால் பறிபோகிறது
இருந்தும்
தேவதையின் கூந்தல் பூக்கிறது
வீடு நிறைய
(8)
பள்ளிப்பிள்ளைகளின் கனவு
பகல்கனவோ !
எள்ளி நகையாட
எடுத்தார் கைப்பிள்ளைகளா!
புள்ளி எடுத்தும்
கல்வி இல்லையா?
துள்ளித்திரியும் வயதில்
குரல்கொடுக்கவைத்தவர்
குற்றவாளிகளா?
குரல்தந்தவர் குற்றவாளிகளா?
நீதியற்ற கைது ஒரு அடக்குமுறை
அராஜகம் வென்றதாய் வரலாறு இல்லை
சிறு துளி பெருவெள்ளம்
செய்தி பரவமுன் விடுதலை
செய் !
(9)
நிலவின் ஒளியில்
ஆற்றாமையுடன் ஆகாயம் பார்த்து
வருணபகவானை தேடுகிறான்
விவசாயி
பார்த்திருக்க நாற்றுக்கள் கருகும்
குடிசையை பட்டினிப்பூதம் ஆளும்
ஆடு மாடுகளும் அவலம் அறியும்
ஊருக்கே உணவு இட்டவன்
காதில் கேற்கும்
குழந்தைகள் அழும் சத்தம்
பசும் மரங்களை வெட்டி
கிராமங்கள் நகரங்கள் ஆயிற்று
வாழ்வு நரகமாயிற்று
(10)
நிலவின் ஒளியில்
முதிர்க்கரங்களின் நளினம்
முற்றத்து கோலமாகிறது
எளிமை வாழ்வில்
(மன)வலிமை பிறக்கிறது
உழைப்பு உயர்வு தருகிறது
அள்ள அள்ளக்குறையா
பாசக்கிணறு ஒன்று
பக்குவமாய் கோலமிட்டு
காலைச்சூரியனை அழைக்கிறது
ஓலைக்குடிசை(க்குள்) ஒளிபெற
தென்றல் தாலாட்ட
மண்வாசத்தை முகர்ந்து
பறவைகளின் இசையுடன்
இயல்புடன் வாழ்தலே
நீண்ட ஆயுளின் இ(ப)ரகசியம்
(11)
மலரே ஒரு வார்த்தை பேசு
நிலவே புது செய்தி வீசு
விலையாய் தருவேன் உயிரை
காதலாய் ஒரு சொல் கூறு
விழியால் கதை பேசி
வலியால் துடிக்கவிடாதே
உயிரே! பழி வேண்டாம்
மௌனம் கொடிது
இதயம் வருட
இதழ்களால் சொல்லு
"நான் உன்னை விரும்புகிறேன் "
(12)
யாதும் ஊரே யாவரும் கேளீர்
பூலோகம் ஒன்றே பிரிவினை மறவீர்- இருந்தும்
தமிழே இனிமை உரக்கச்சொல்வீர்
மனிதம் வாழ கவிதை புனைவீர்
(13)
விழியே கதை எழுது
காதலை மொழியாக்கி
அதன் வழியே எழுது
உளிகொண்டு
என் இதயத்தில் சிலையாய் எழுது
பிழையாய் போனாலும்
கலையாய் அது வாழும் நீ எழுது
அழுது அழுது கருவிழி கரைந்தாலும்
நிலையில்லா வாழ்வில்
விழியே! உன் மொழி போதும்
என் ஆயுளுக்கு
விழியே கதை எழுது
உயிர் மையால் அதை எழுது
(14)
வயலில் விளையாடியே உழைத்ததும்
ஊருக்கே உணவு தந்ததும்
அது ஒரு கனாக்காலம்
வரிசைகளில் வரம்புக்கட்டி ,
ஏர் எடுத்து உழுது , மூலை கொத்தி,
கார்த்திகையில் நெல் விதைத்து,
அளவாக உரமிட்டு ,
ஆடல் பாடலுடன் அறுவடை செய்து ,
விடிய விடிய சூடடித்து,
உணவுக்கு நெல் வைத்து
மிகுதி விற்று
வீடு செழுமையாகும்
வாழ்வு பூ பூத்திருந்தது
நகைவிற்று,
நெல்விதைத்து , புல் பிடுங்கி ,
மழையற்று நாற்று கருகும்
வயலை ஈடுவைத்து ,
மழை பார்த்து
நாற்று வாங்கி
மீள நட்டும்,
பூச்சிக்கு மருந்தடித்தும்,
வெள்ளம் வந்து அள்ளிப்போகும்
அழையா விருந்தாளியாய்
வறுமை
குடிசைக்குள் குடியேறும்
உறவுகள் ஒவ்வொன்றாய் கலற
ஊருக்கு உணவிட்டவன் வீட்டில்
கஞ்சிக்கு பெருமூச்சு
இது ஒரு கரிகாலம்
(15)
காதல்க் கணவன்
களத்தில் கண் மூடினான்
என் உயிர் அவனிடம்
அவன் உயிர் என்னிடம்
இறந்தது அவனா?நானா?
உறவுகள் தந்தது வெள்ளை சேலையை
சுமங்கலியில் பொட்டிழந்து விதவையானேன்
வீணையில் அவனுக்காய் இசைக்கிறேன்
அவன் வரவில்லை
அவனிடம் நான் செல்வேன்
அதுவரை நான் இசைப்பேன்
(16)
தன்னம்பிக்கை தரணியை ஆளும்
முயன்றால் இயலாது இல்லை
நம்பி(க்)கை
கொடுங்கள்
குடிசையும் குதூகலிக்கும்
எதிர்பார்ப்பற்று ஏணியாய் இருங்கள்
மனிதநேயமே புனிதமானது
கருணையும் கல்வியும்
மனிதத்தின் இரு கண்கள்
வழங்க வழங்க
அதிகம் அதிகமாய் பெறுவோம்
மனிதரில் வேற்றுமை இல்லை
ஒற்றுமையில்
உங்கள் கையில் உலகம்
(17)
அச்சமில்லை
எழு!
எப்படைவரினும் மிச்சமில்லை
வீரத்தை உச்சமாய் வைத்திரு
தர்மத்தில் இயங்கு
ஏழைக்கு இரங்கு
நெஞ்சுரம் கொண்டு சத்தியம் செய்
"அடிமையாய் வாழேன்" என்று
தற்கொலை தவிர்
விடுதலைக் கவிஞனை நினை
நிமிர்ந்து நில்
அச்சம் என்பது மடமையடா
எந்நிலைவரினும் துணிந்து செல்! வெல்!
(18)
கொடையாளன் கோ மகன்
வரலாற்றில் கற்றேன் வள்ளல்களை
முல்லை செடிக்கு தேர் கொடுத்த பாரி
கேட்டதெல்லாம் கொடுத்த கர்ணன்
இல்லை என்று சொல்லியறியா மன்னர்
வாழ்ந்த பூமியில் - இன்று
உண்ண உணவின்றி ,
கல்வி தொடர வசதியின்றி ,
கவனிக்க ஆதரவு கரம் இன்றி
வாடும் குழந்தை முகங்கள் வந்து போகின்றன
நான் செய்த புண்ணியத்தால்
வரலாறு ஒன்றை கண்களால் பார்த்தேன்
அங்கு
அநாதை என்று யாரும் இருக்கவில்லை
பிச்சை எடுப்பவரை காணமுடியவில்லை
நோய் நொடிக்கு தேடிவரும் உதவி
லஞ்சம் இல்லை
பிரபா என்ற மன்னன்
எல்லோருக்கும்
அண்ணனாய் தம்பியாய் பிள்ளையாய் இருந்தான்
"வள்ளல் " ஆக முடியாவிடினும்
நல்ல மனிதர்களாய் வாழ்வோம்
பசித்த வயிறுகளுக்கு உணவை பங்கிடுவோம்
குருதிக்கொடை செய்வோம்
உடலுறுப்பு தானம் செய்வோம்
வள்ளல்களின் வழியில் செல்வோம்
(19)
நிலவின் ஒளியில்
கோழி குஞ்சுகளை காப்பதுபோல்
இந்த உயிருள்ள முதிசங்களை
காக்கின்றன முதியோர் இல்லங்கள்
பொத்தி வளர்த்த பிஞ்சுகள்
மனம் ஒத்து கைவிடவில்லை
தம் உறவுகளை
கடின உலகில்
நடைமுறை வாழ்வு
சிக்கி திக்குமுக்காடுவது
இரு உறவுகளுக்கும் புரியும்
இரு உறவுகளும் அழும் சத்தம்
யாருக்கு புரியும்?
(20)
நிலவோடு நினைவுகள்
கவிதைக்கு பொய்யழகு
பெண்ணுக்கு
கண் சிமிட்டும் மொழியழகு
ஆணுக்கு
தோள்கொடுக்கும் நட்பழகு
முதுமைக்கு
பொக்குவாய் சிரிப்பழகு
மழலைக்கு
தத்தி வரும் நடையழகு
மாதாவுக்கு
சதா நினைக்கும் பாசமழகு
பிதாவுக்கு
மௌனமாய் இரசிக்கும் குணமழகு
குருவிற்கு
உழைப்பில் வாழும் எளிமையழகு
கவிதைக்கு மட்டுமல்ல பொய்யழகு
கள்ளனுக்கும்
(21)
சுழற்றும் சாட்டையில் சுழலும் உலகம்
அன்னையின் அரவணைப்பில்
கண் முன் புலர்ந்த உலகம்
தந்தையின் கண்டிப்பில்
பலதும் அறிந்த உலகம்
நண்பர்களால்
சுற்றம் விரிந்த உலகம்
குருவால்
விண் தொட்ட உலகம்
இணையால்
காதலே உலகம்
குழந்தையால்
பூஞ்சோலையான உலகம்
அரசியல் சாட்டையால்
சுழல்கிறது உலகம்
சுழலும் உலக வேகத்தில்
நிதானிக்க முடியவில்லை
விலைவாசி ஏறுவதை
கவனிக்க முடியவில்லை
பிரிவினை விதைக்கப்படுவதால்
முகம் பார்த்து புன்னகைக்க முடியவில்லை
வேலைச்சுமை வேதனையை கூட வெளிப்படுத்த
பிள்ளைகள் முன் அழமுடியவில்லை
சுழலும் உலகம் சுற்றுகிறது
அரசியல்வாதி விரும்பியபடி
உழலும் மனதை தேற்ற
கவிதை எழுதுகிறேன்
நான் விரும்பியபடி
சுழலும் உலகிலும்
என் கவிதையை இரசிக்கிறீர்
தேநீர் அருந்தியபடி
அரசியல்வாதி
சுழற்றும் சாட்டையில் சுழல்கிறது உலகம்
(22)
விளையாட்டில் கூட
தற்கொலை வேண்டாம்
வாழ் ! வாழவிடு!
உலக அதிசயம் ஏழு
அறியாத புதிர்கள் அதிகம்
அணு அணுவாய் அனுபவி
இயற்கையின் அழகு
அள்ள அள்ள குறைவதில்லை
முயலாதவனே இயலாதவன்
மகிழ்ச்சி பணத்தில் இல்லை
உன் அகத்தில் இருக்கிறது
உயிர்களை நேசி!
உள்ளங்களில் வாழ்!
(23)
முயற்சியே உயர்ச்சியின்
படிக்கட்டுகள்
தாஜ்மகால்
கல்லால் மட்டும் கட்டப்பட்டதல்ல
வியர்வையாலும்தான்
முயலாதவன் இயலாதவன்
முயன்றவனே சிகரம் தொட்டான்
லிங்கனும் கலாமும்
அதில் இருநட்சத்திரங்கள்
வாழ்வின் நெம்புகோல் முயற்சி
வசந்தத்தின் உரமும் அதேதான்
விதையின் முயற்சியே மரம்
குழந்தையின் முயற்சியே நடை
வெற்றியின் இரகசியம் முயற்சி
(24)
காற்று காவி வருகிறது
மென் மழையை சாய்வாக "சாரல்"
தூவிப்போகும் சாரலில்
மகிழ்கிறது மனது
எழுகிறது மண்வாசம்
சாரல் மழையில் நனைய
ஒரு சங்கீதம் இருக்கிறது
காதலருக்கு
ஒரு குறும்பு இருக்கிறது
சிறுவருக்கு
ஒரு ஆறுதல் இருக்கிறது
தொழிலாளிக்கு
ஒரு செய்தி இருக்கிறது
பறவைகளுக்கு
(25)
ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமேயில்லை
ஊர்முழுக்க பஞ்சமேயில்லை
போர் தொடுக்க வேண்டியதுமில்லை
சீர் கொடுக்க தேவையுமில்லை
உற்றுப்பார்! உடலில் நோயுமேயில்லை
கோழி கூவி காலை விடியும்
காளை நடக்க வேலை தொடங்கும்
உழவுத் தொழிலை மதி பூமி சிறக்கும்
மாலை வேளை இல்லம் கூடி
இருளை வெல்ல விளக்கு ஏற்றுவோம்
வெல்ல வாழ்வை ஆடி பாடி மகிழ்வோம்
நெல்மணிகள் விளையிற நிலத்தில
கண்மணிகள் அழுவது இல்லையடா
கழனிகள் பச்சையுடுத்தால்
உலகில் அதை மீறும் அழகு இல்லையடா
மனம் பொங்க ஆதவனுக்கு
நன்றியோடு பொங்குவோமடா
ஏர்முனைக்கு நேரிங்கே ஏதடா
பூமித்தாய் தந்த சொத்து
பூரித்தாய் அதை ஏத்து
விரித்தாய் உறவை சேர்த்து
ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமேயில்லை
(26)
தமிழுக்கு உயிர் வணக்கம்
தலைமைக்கு பணிவு நிறை வணக்கம்
சபைக்கு அன்புசேர் வணக்கம்
இனிக்க இனிக்க பேசும் மொழி இருந்தும் ,
அன்பொழுகும் அன்னை இருந்தும் ,
ஊர் போற்றும் ஒழுக்க வாழ்வு இருந்தும்
நாடு இல்லாவிட்டால்
ஓடுகாலி வாழ்வே மிஞ்சும்
நாடே உயிரிலும் மேலானது
நாடு இல்லாதவன் அடிமை
அதனால் நாற்றுப்பற்றே சிறந்தது
உலகம் சுற்றும் வாலிபனுக்கும்
சந்திரனுக்கு சென்று வந்தவனுக்கும்
விஞ்ஞானத்தை கரைத்துக் குடித்தவனுக்கும்
விளையாட்டில் விண்ணனுக்கும்
பெற்றநாடே பொன்
நாடு
பிறந்த மண்ணே தாய்மடி
நாட்டுப்பற்றே உயிர்நாதம்
தத்தித் திரிந்த முற்றம்
ஒட்டி உறவாடிய சுற்றம்
பட்டம்விட்ட வயல்வெளி
நீந்தி விளையாடிய குளம்
ஊர்கூடி ஓடி விளையாடிய மைதானம்
மூளைப்பசி தீர்த்த நூலகம்
அறுக்கமுடியா உறவான பள்ளி
மறந்திடுமா சொர்க்கம் போனாலும்
மகாத்மா , நேதாஜி, இந்திரா காந்தி,
இந்த ஆத்மாக்கள் யாவரும்
வாழ்ந்ததும், இன்றும் வாழ்வதும்
நாட்டுப்பற்றாலேயே
நாட்டுப்பற்று பொதுநலம்
நாடு வாழ , அங்கு வாழும் மக்கள் வாழ ,
அவர்தம் கலை கலாச்சாரம் வாழ ,
தாய் மொழி வாழ
நாட்டுப்பற்று அவசியம்
நாட்டுப்பற்று அற்ற செயல் யாவும்
விழலுக்கு இறைத்த நீராகும்
தானங்களில் சிறந்தது இரத்ததானம்
பற்றுக்களில் சிறந்தது நாட்டுப்பற்று
உலகம் கேட்க அடித்துக்கூறு
அனைவருக்கும்
மனம் நிறைந்த நன்றிகள்
(27)
காற்றுக்கு வேலியில்லை
கவிதைக்கு பாரமில்லை
கனவுக்கு வெட்கமில்லை
கல்லுக்கு கூச்சமில்லை
காதலுக்கு கண்ணில்லை
கள்ளனுக்கு கவலையில்லை
கடவுளிடம் இரக்கமில்லை
கவிதைக்கு பாரமில்லை
கனவுக்கு வெட்கமில்லை
கல்லுக்கு கூச்சமில்லை
காதலுக்கு கண்ணில்லை
கள்ளனுக்கு கவலையில்லை
கடவுளிடம் இரக்கமில்லை
(28)
கனவுகள் ஆயிரம் நீ தந்தது - இன்று
நினைவுகள் பூவாய் பூத்தது
பா-க்களில் அழகிய கருவாகி
இசைகளில் ஓசையாய் நீ
பாடல்களில் சந்தங்கள் ஆகி
என் நெஞ்சில் மூட்டுகிறாய் தீ
மென் பாதங்களின் ஒத்தடத்தால்
பசுமைகளை பஞ்சணை ஆக்கி
குளிர்மையாய் தென்றலாய்
மேகத்தினுள் ஒளிந்தாய் தேவதையாய்
(29)
அது இதயத்தின் பாடல்
காடு
அது இயற்கையின் கூடல்
கவிதைக்காடு
அது வாழ்வின் தேன்
கண் நிறையும் நீர்வீழ்ச்சியாய்
உடல் தொடும் குளிர் போர்வையாய்
பாடும் பறவைகளின் இசையுமாய்
மான்களின் துள்ளல்களின் மகிழ்வாய்
கவிதைகள் ஒன்றாகி பசுமையாய்
கவிதைக்காடு
அது மனதில் நிலாச்சோறு
(30)
சிந்தனை சிறகை அகல விரித்து
அகிலமெல்லாம் பறக்கிறேன் - மிகு
வந்தனையுடன் இறைவனை கேட்கிறேன்
அகால உயிர்பறித்தல் முறைதானோ?
அநாதையாய் வாழ்தல் துயர்தானே ?
உயிர்கொல்லி நோய்கள் உனக்கு வரிதானே?
குறையுடன் பிறத்தல் வலிதானே? - மனிதரில்
ஏற்ற இறக்கம் சரிதானோ?
விரைவினில் இடர் அகழ் கருணையாலே
(31)
தொடுவானம் நிஜமல்ல
கானல்நீர் போலவே - எனினும்
தொடு நீ
வானம்
விடாமுயற்சியும் பயிற்சியும்
உயர்ச்சி தரும்
வானத்தில் அண்ணாந்த்து பார்த்த
சந்திரனில்
கால் பதித்தான் மனிதன்
கணணியை உருவாக்கி
அதற்குள்
உலகையே அடைத்தான் மனிதன்
உன்னையே நம்பு
முடியும் உன்னால்
தொடு நீ வானம்
(32)
அதர்மம் கொடிது
சூதுவாது நிரம்பியது
துன்புறுத்தி இன்புறும்
மனிதம் அற்றது
தர்மம் இனிது
அன்பால் பிறந்தது
அறுதியும் இறுதியுமாய்
தர்மம் வெல்லும்
சூதுவாது நிரம்பியது
துன்புறுத்தி இன்புறும்
மனிதம் அற்றது
தர்மம் இனிது
அன்பால் பிறந்தது
அறுதியும் இறுதியுமாய்
தர்மம் வெல்லும்
(33)
அம்மியில் சம்பல்
அரைச்ச கையே
அரைமணிக்கு
மணக்கும்
அந்தக்கால நினைவை
அவிட்டுவிட்ட
படமிது
அழுகையோட ஆசையும்
அரையுயிராய் துடிக்குது
அம்மாவின் நினைவுடன்
(34)
ஆச்சி இறந்தபின்
தினம் அழும்
அப்புவின்
கண்ணீர் சுடும்
இளமையின் வறுமையில்
இழந்த கல்வி,காதல்
நினைக்கையில்
கன்னம் சூடேறுகிறது
கண்ணீரால்
ஒரே நாளில் அகதியாகி
விம்மி விம்மி அழுது
வற்றிய கண்ணீரால்
இதயம் சிவந்திருக்கிறது
எரிதணலாய்
கண்ணீர் சுடும்
கன்னத்தில் மட்டுமல்ல
இதயத்திலும்
(35)
ஒரு கடிதம் எழுதுகிறேன்
அம்மா!
என்னால் முடியவில்லை
சதா வேலை
தாமதம் ஆகின
திட்டு கேலி
சிலநேரம் அடி
அரைவயிறு உணவு
ஓய்வு இல்லை
வருவோர் போவோருக்கு
"வேலைக்காரன்" அறிமுகம்
அப்பா இல்லை
பள்ளி போகமுடியவில்லை
பரவாயில்லை
உடன்பிறப்புகள் வாழும்
அம்மா!
என்கவலை அறியாமல் இரு
கடிதத்தை கிழித்துவிடுகிறேன்
(36)
நிலவோடு நினைவுகள்
மனிதவாழ்வின் சக்கரம்
உணவல்ல பணமல்ல
சுதந்திரம்
நினைத்ததை பேசவும் - மனம்
விரும்பியதை எழுதவும்
பச்சை வயலை இரசிக்கவும்
நீலக்கடலில் குளிக்கவும்
யாவரும் சமனென வாழும்
உரிமை வேண்டும்
மனிதனை மனிதனாய்
மதிக்கும் மனிதம் வேண்டும்
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன கூலி
பூமிக்கேன் விழி
ஆதவனுக்கேன் ஒளி
(37)
குறுங்காட்டில் மலர்த்திரைபோல்
என் மனக்கூட்டில் நீ அசைகிறாய்
அருள் தந்து இறைவன் இருப்பது போல்
உரு மறைந்து என் உயிரில்
இசைக்கிறாய்
பனிப்படலம் ஆதவனால் கலைவது போல்
என் மேனி தொட்டு கனவோடு ஒளிக்கிறாய்
கவிதையாய் பூங்காற்றில் தவள்பவளே !
காதலாய் சிறை உடைத்து வா!
குளிர் நிலவு
குடை பிடிக்க
அருவிகளின் சலசலப்பில் அருகில் வா!
(38)
தலைக்கனம்
தலை கீழாய் வீழ்த்தும்
வெற்றியில் எளிமையே
போற்றும் அறிவின் செழுமை
கலாம் பண்பின் சிகரம்
காந்தி விடுதலையின் அகரம் - இவர்
தற்பெருமை அற்ற பாரத முத்துக்கள்
(39)
முயற்சியே உயர்ச்சியின் முதல் படி
இயற்கையின் அதிசயங்களை கரைத்து குடி
வியர்வைவர உழைப்பெடுத்து வாழ்வை நீடி
மகிழ்வினை நிலையாக்கு ஒன்று கூடி
இயற்கையின் அதிசயங்களை கரைத்து குடி
வியர்வைவர உழைப்பெடுத்து வாழ்வை நீடி
மகிழ்வினை நிலையாக்கு ஒன்று கூடி
(40)
காதல் , உயிர்களை இணைக்கும்
புலப்படாத இழை - உள்ளத்தை அள்ளித்தா என
தாலாட்டும் தென்றல் - இனமில்லை மதமில்லை சாவில்லை
அன்பாய் பொழியும் மழை
(41)
இரு காந்தப்புள்ளிகள்
ஈர்க்கும் கோடு
காதல்
இரு புள்ளிகளும்
ஒன்றாகி ஒருபுள்ளியாகும்
இரு புள்ளிகளும்
ஒன்றாகி ஒருபுள்ளியாகும்
திருமணம்
ஒருபுள்ளியின் பலம்
காந்தப்புலமாகி பெருவட்டமாகும்
ஒருபுள்ளியின் பலம்
காந்தப்புலமாகி பெருவட்டமாகும்
குடும்பம்
ஈர்ப்பு குறைய
திசைமாறும் புள்ளிகள்
ஈர்ப்பு குறைய
திசைமாறும் புள்ளிகள்
விவாகரத்து
(42)
தேர்தல்
மழைக்காலத்து
காளான்
தேர்வு
எழுதாதவனும்
தேறலாம்
- எனினும்
மறைவில்
தகுதி
எழுதாத
சட்டமாய்
தேர்தல்
மக்கள் கையில்
எனினும்
மக்கள்
மாயவலையில்
தேர்தல்
வரும் போகும்
ஒரு
மயக்க கனவுபோல
தேர்தல்
ஒரு திருவிழா
இருள்
ஊர்களிலும் ஒளிவிழா
பந்தயக்குதிரைகள்
பார்வைக்கு வரும்
சங்கீதக்கதிரையில் வெல்பவர் யார்?
உறுதிமொழிகள்
ஊரை உலுப்பும்
திருவிழா முடிய வழமைக்கு திரும்பும்
வென்றவர்
சென்றவர்தான்
தியாகியும்
தேர்தலில்
கேடியும்
தேர்தலில்
சிலநேர
முடிபுகளில்
மனிதனுக்கு
வெட்கமில்லை
தேர்தல்
சனநாயகத்தின் முதல்படி
குழப்படிகாரன்
செப்படிவித்தை
செய்யாதவரை
பணம்
மது மதியை வெல்லாதவரை
கறையான்
புற்றிலும்
நாகம்
இருப்பினும்
தேர்தல்
நல்ல
தேர்வு
மக்களை
மக்கள் ஆள
சர்வாதிகாரம்
சாக
மக்கள்
மனநிலை அறிய
தேர்தலே
வருக !
(43)
வரம்பு
வயலில் ஒய்யார இருப்பு
பிரம்பு கொண்டு கலைக்குதடி என்னை
சிலை கூட தோற்கும் அழகு
கலை வடியும் உன்முகம் மெழுகு
பெண்ணே! தென்றலில் அசையும் பூவே!
கண்ணே! என்கனவையும் களவாடும் மானே!
பச்சை வயல் கனவில் - தினம்
வாழும் என் மாமா வீட்டுக்குயிலே!
(44)
ஒரு
நடுச்சாமத்தில்
உடுத்த
உடையுடன்
எடுத்த
பொருளுடன்
எடுத்தோம்
ஓட்டம்
படுத்த படுக்கையாய்
இருந்த
ஆச்சியை
கைவிடுத்து
நெஞ்சு
படபடக்க
அடுத்த
ஊரும் தாண்டி
நிலவே நீ
சாட்சி
நீ
அறிவாய் பூரணமாய்
தலையில்
சுமை தான் - இருந்தும்
அருகில் இமைகளாய்
இரு இளசுகள்
(45)
வெண்ணிலவே
வா மண்ணிறங்கி வா
உன்னோடு சமாதானம் கொண்டு வா
வெண்ணுள்ளம் தந்து விண்ணுக்கு போ
கண்குளிர எம் மனக்காயம் ஆற்றிப்போ
(46)
சுள்ளித்தடிகளாய்
மனதினில்
கலவரம்
பெரு விருட்சங்களாய்
சாதி, மதம், இனம் என நீளும்
பலவகை கலவரம்
கலவரம் வீரமல்ல
பேடிகளின் கூத்து
ஆதிக்க
பேய்களின்
பின் விளையாட்டு
சகமனிதனின் துன்பத்தில்
குளிக்கும் மனப்பிறழ்வு
மனிதனே!
உளவுரத்தை கூட்டு
நிலவரத்தை மாற்று
மனிதமே வரம்
புனிதத்தை நிலைநாட்டு
பகுத்தறிவை பற்றவைக்காதே
கலவரம் சிலநாட்கள்
வடு ஆயுள்வரை
மன்னிப்பே மருந்து
வரலாறு சபிக்க
தீயவர் நாணி சாவர்
அன்பே மேல்
மொழி,நிறம்,மதம் கடந்து
மனிதனில் மாண்பு காண்!
கலவரத்திலும் விளம்பரமா
வியாபாரம்
போதும்
எரிவது ஏதுமறியா உயிர்களும்
நீள்கால
உழைப்பும் மட்டுமல்ல
மனிதனின்
ஆறறிவும்தான்
எத்தனை
இளசுகளின் கனவுகள்
கானல்நீராயிற்று
அறிந்து வை
மனிதா!
எரியவேண்டியது
உன்
அகங்காரம்தான்
யாரும் அறிந்து பிறப்பதில்லை
பிறந்தபின்தான்
தெரியும்
சாதி, மதம்,இனம்
புரிந்துகொள் மனிதா!
வாழ்வு குறுகியது
வா மனிதா!
கூடி வாழ்வோம்
நாளும்
திருவிழாவாய்
(47)
ஒரு
வீரயுகம்
கண்முன்னால்
காணாமல் போயிற்று
தரையில்
தத்தளித்தன மீன்கள்
துடுப்பிளந்தது
வாழ்க்கையின் ஓடம்
சுயநினைவு
மீள யுகங்கள் போதாது
கண்ணீரால்
கழுவமுடியா குருதியே
முள்ளிவாய்க்கால்
இன்னும்
கேட்டுக்கொண்டிருக்கிறது
துயரத்தின்
ஒலி