திங்கள், 28 பிப்ரவரி, 2011

மீளும் தேச ஒளி

வாழ்வின் கோலங்கள்
அழிந்தும்
மனதில் அழியாகாயங்கள்
சிறைவதையில்
தினம் உயிர்சாகும் காலங்கள்
ஈன ஓலங்கள்
வாழும் மனிதருக்காய்
மீளும் தேச ஒளி.

                                        -செல்வி-     

சின்ன பபா சின்ன பபா என்ன செய்ய போகிறாய்?

சின்ன பபா சின்ன பபா 
என்ன செய்ய போகிறாய்?
படித்து,பட்டம்பெற்று
நல் மாணாக்கர்களை 
உருவாக்கப்போகிறேன்.
  
சின்ன பபா சின்ன பபா 
என்ன செய்ய போகிறாய்?
துன்பம் வந்தோருக்கு
உதவ போகிறேன்.சின்ன பபா சின்ன பபா 
என்ன செய்ய போகிறாய்?
பொறியியலாராகி 
சீனச் சுவர்போல் 
கட்டப்போகிறேன். 

   
சின்ன பபா சின்ன பபா 
என்ன செய்ய போகிறாய்?
உலக சமாதானத்திட்காய்
உழைக்கப்போகிறேன்.


சின்ன பபா சின்ன பபா 
என்ன செய்ய போகிறாய்?
விமானியாகி வானத்திலே
பறக்கப்போகிறேன்.

                                                                      -செல்வி-ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

நாடில்லா அகதியின் நாதியற்ற வாழ்வு.

வேற்று மண் 
உறவுகள் அற்ற அயல்
புரியா மொழி 
அறியா பண்பாடு
பழகா வழக்கங்கள் 
நாடில்லா அகதியின்
நாதியற்ற வாழ்வு.

                           -செல்வி- 

தினம் மனதில் கொண்டாட்டம்தான்

அழகான தாய்மண்ணில்
ஆங்காங்கே 
கும்பிட கோவில்கள்,
எங்கும்  
வளம்நிறை வயல்கள்,
வளைந்து சாகசம் செய்யும் அருவிகள்,
வரிசையில் பனை,வடலி,
தென்னஞ்சோலை 
குலை குலையாய் தேங்காய்,
தரையில் வெண்மணல் ,
உடன் காய்கறிகள் 
தினம் மனதில் கொண்டாட்டம்தான் . 

                                                             -செல்வி-    

பயணங்கள் முடிவதில்லை

நாட்டினிலே 
பொதியோடு 
ஊர் ஊராய் பயணம்.
உயிர் காக்க 
காட்டினிலும் பயணம்.
காயத்துடன்
உயிர் ஊசலாட 
கடலிலும் பயணம்.
உயிரை கையில் பிடித்த வாழ்வில் 
தப்பி 
வானத்திலும் பயணம்.
நாடுமாறி நாடுமாறி
இரவல் குடையின் கீழ் வாழ்வு.
வாழ்க்கை ஒரு பயணம்.
                                                            -செல்வி-

  

மீண்டும் அந்த நாட்கள் வாராதோ

அழகான அந்த பாடசாலை
தினம் நினைவு மனம் வருடும்.
அன்புக்கு தலைமை ஆசிரியை 
பாசமுடன் பழக சக ஆசிரியர்
 உளநலம் தர அருட்சகோதரிகள்
நலம் கேட்டு ஆசையுடன்  பாடம் புகட்ட
என் மாணவர் -இவர் உயர்வில்
மனம்குளிர 
மீண்டும் அந்த நாட்கள் வாராதோ?
                                                 -செல்வி-


   மீண்டும் அந்த நாட்கள் வாராதோ

ஆகா --எப்போகாலை விடியும் ?

அழகில் மனம் குளிரும்.
நிலவில் ஊர் உறங்கும்.
கடற்கரையில் அலை உறுமும்.
வயல்களின் உயிராய் பயிரசையும்.
கோயில் மணி அடிக்கும்.
ஆகா --காலை விடியும் எப்போது?

                                                            -செல்வி-

உஷ்!ஆட்காட்டி குருவி பறக்கிறது

பிள்ளைகளை இழந்த வீடு.
சோலை துறந்த பூமி.
பாடு பொருள் மறந்த குயில்கள்
வாடும் காடு.இதுவும் நாடாம்.
சுதந்திரம் ரொம்ப உண்டாம்.
உஷ்!ஆட்காட்டி குருவி பறக்கிறது.

                                                                          -செல்வி-  

சனி, 26 பிப்ரவரி, 2011

பார்த்துவர ஆசை

அம்மாவை பிள்ளைகளும்/
பிள்ளைகளை அம்மாவோ/அப்பாவோ
தேடுவது
இன்று வன்னியில் வழமை.
பாதுகாப்புக்கு ஆமி இருப்பதால்
பாதுகாப்பு இல்லவே இல்லை.-இருந்தும்
முள்ளிவாய்க்கால்,நந்திக்கடல் 
பார்த்துவர ஆசை.-இருந்தும்
நான் என்ன செய்ய 
இருகால்களும் இல்லையே.

                                  -செல்வி-

நெருப்பெரிகிறது ஈழவன் நெஞ்சில்.

சோகம் சுமந்து
பறக்கிறது மனசு.
கவலையில் மூழ்கிறது
வாழ்வு.
எதிரியை
அழிக்கத்துடிக்கின்றன
புஜங்கள்.
                            -செல்வி-

 

கவி முகங்கள் சிதைந்ததா

இருளும் ஒளியும் கலந்ததா?
இதய வானில் பறந்ததா?
உயிரும் உடலும் பிரிந்ததா
ஈழவானில் கழுகு பறக்குதா.
கவி முகங்கள் சிதைந்ததா.
காடும் குளமும் அழுகிதா.
மீள காலை புலருமா?

                                             -செல்வி-  

நனவில் கரைகிறது மனிதம்

வெறும் கனவுகளில்
தவிக்கிறது மனது.
மனிதம் உலகால்
ஒப்புக்கு பார்க்கப்படுகிறது.
ஐநா வில் ஐயம் வருகிறது.
யாரைத்தான் நம்புவது.
நனவில் கரைகிறது மனிதம்.

                                                    -செல்வி-

கவிதை வாழ்வு கழுதை வாழ்வாயிற்று

ஊரில் வாழ்ந்த இனியவாழ்வு
மனதில் படமாய் ஊறும்.
எல்லாம் தொலைத்தோம்
கவலையை தொலைக்க வழியேது?
                                                                 -செல்வி-

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஈழவன் மனதின் இன்றைய கற்பனைப்புள்ளி .

யாருமில்லாத தீவும்,
பறவையின் வாழ்வும்
ஈழவன் மனதின்
இன்றைய கற்பனைப்புள்ளி .

                                                        -செல்வி-

இயந்திரத்தோடு போட்டிபோடுகிறது மனிதவாழ்வு.

உலகமெங்கும் அழகு
கொட்டிக்கிடக்கிறது-எங்கும்
தாய்மண்ணின் வாசம் இல்லை.
ஐஸ் கட்டியிலிருந்து சூரிய அருகுவரை
சென்றாலும்
அந்த தாய்மடி சூடு இல்லை.
இங்கு
இயந்திரத்தோடு போட்டிபோடுகிறது
மனிதவாழ்வு.
                             -செல்வி- 

விழ விழ எழும் இனம்தான்

"இழப்பில் இருந்து மீள் எழல்" 
கதைக்க/ஆலோசனை தர
மட்டும் பொருந்தலாம்.
ஈழத்தமிழருக்கு
நிஜவாழ்வில்
கானல் நீர்தான்.-இருந்தும்
விழ விழ எழும் இனம்தான்.


                                                                                                               -செல்வி-

வியாழன், 24 பிப்ரவரி, 2011

விதைத்த வித்துக்கள் எப்போது முளைக்கும்.

மொட்டுக்கள்
பூக்களாய் விரிகின்றன.
விதைத்த வித்துக்கள்
எப்போது முளைக்கும்.
விதைத்தவர்
பூக்களை வைத்து
கண் மூடாது
பார்த்திருக்கின்றனர்.
                              -செல்வி-