செவ்வாய், 24 ஜனவரி, 2012

இன விடுதலையை ஏற்பாயா? மாமனிதனே!





தமிழனின் தலை நிமிர்வு 
அறிவு,எளிமை,மனித மனவளர்ப்பு 
ஈடில்லா மனிதனின் 
தியாகம் செறிந்த 
மண்ணிற்கான வருகை 
உவகை கொண்டோம்,
மெய் சிலிர்த்தோம் 
இன்னும் இன்னும் 
ஏன் எதற்காய் 
இவ்வளவு உயிர்கள் 
அர்ப்பணிக்கப்பட்டன? 
புரிதலை ஈர்த்து 
இன விடுதலையை ஏற்பாயா?
மாமனிதனே!

திங்கள், 23 ஜனவரி, 2012

நிலாக்காணா வாழ்வு



நினைவுகள் ஓடும் 
நிலாக்காணா வாழ்வு 
மறக்கவும் முடியாமல் 
மறக்கவும் கூடாமல் 
தத்தளிக்கும் 
 நிலாக்காணா வாழ்வு 
நம்பவும் முடியாமல் 
நம்பித்தான் --------------
செல்ல வேண்டிய பாதை எது?
நிலாக்காணா வாழ்வில் 
அலைக்கழியும் மனிதம் 

சனி, 21 ஜனவரி, 2012

அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் ஜனநாயகம்

அரச பயங்கரவாதம் 
தலைவிரித்தாடும் ஜனநாயகம் 
உடந்தையாகும் கோடரிக்காம்புகள் 
எதுவும் நடக்காதது போல் 
அபிவிருத்தி பேசும் கீழ்த்தனம்
மக்களை அணைப்பது போல் 
உயிர்பறிக்கும் கபடம் 
அடிப்படையை விட 
அலங்காரம் தான் முக்கியம் எனும் 
தம் வாழ்வை மேம்படுத்துவதற்கான   
ஏமாற்றுத்தனம்  
ஆக்கிரமிப்பாளனும்,எட்டப்பரும்
நெடுநாள் வாழமுடியாது
விடுதலையை
சலுகைகளுக்காய் விலை பேசுபவரை
அவர் பரம்பரையே காறிஉமிழும்.

news

வெள்ளி, 20 ஜனவரி, 2012

அவனை கை பிடித்து தூக்கி விடுங்கள்



தமிழன் 
உதவ விரும்புபவன் 
இன்று 
அவனே 
உதவி கேட்கிறான் 
அவனை 
கை பிடித்து தூக்கி விடுங்கள் 
மீண்டும் 
அவன் உதவுவான்   

காலம் குறிப்பெழுதும்





ஒரு காலத்தின் சுவடு 
தமிழன் ஆண்ட அடையாளம் 
தமிழனை மண்ணில் புதைத்தார் 
மண்ணை எங்கே புதைப்பார் ?
வடுக்களை பிடிங்கினார் 
அதை விட 
பெரு வடுக்கள் தோன்றுது 
நாகசாகி ,சீரோசீமா 
மீண்டும் வருமா?
காலம் குறிப்பெழுதும் 

வியாழன், 19 ஜனவரி, 2012

விடுதலைக்காக கடின பாதையை கடக்கிறாய்



உன்வாழ்வும், உன் அடையாளமும்
உன் சிரிப்பும்
என்னோடும் இருக்கிறது
பிஞ்சு வயதிலும்
சுமக்க முடியா அனுபவங்களை
நீயும் சுமக்கிறாய்
பலரைப்போல நீயும்
விடுதலைக்காக
கடின பாதையை கடக்கிறாய்
தனித்துவமான ஒரு இனம்
தன் விடுதலைக்காய் அவாவி
ஏனைய இனங்களுக்கும்
சுதந்திரம் வர பிரார்த்திப்போம்
s




புதன், 18 ஜனவரி, 2012

இனவிடுதலையை யாருக்கும் ஒப்புவிக்காத மனது



அனாதையாய்,அகதியாய் 
தனிமையில் திளைப்பதிலும் 
ஒரு சுகம் இருக்கிறது 
சொற்ப ஊதிய வேலையாயினும் 
பறவையின் சுதந்திரம் கிடைக்கிறது 
வெறும் அறைக்குள் முடங்கினாலும் 
என் தேவைகளுக்காய் 
யாரிலும் தங்கியிராத வாழ்வு 
என்பாட்டில் பாட்டு பாடும் வாழ்வு
இனவிடுதலையை 
யாருக்கும் ஒப்புவிக்காத மனது   

ஜனநாயகத்தையும் துணைக்கு அழைக்கிறார்



புத்த பகவான்
எந்த ஆசையும் அற்றவர்
மனித புனிதராய் அவதரித்தவர்
அவரை
எம்மண்ணில்
வேறு நோக்கில் ஊன்றுகின்றனர்
ஒவ்வொரு இனத்தின் , தனி மனிதனின்
சுதந்திரத்தை,தனித்துவத்தை
மதித்தாலே மனிதம் , நிஜவாழ்வு .
தம் அரசியலுக்காக
தம் பிழைப்பிற்காக
நடுநிலை துறந்து  
ஏதோ எல்லாம் செய்கிறார்
ஜனநாயகத்தையும் துணைக்கு அழைக்கிறார்



என் ஊருக்கு
நாங்கள் போகமுடியாது  
அஞ்ஞாதவாசம்
இருபது வருடமாகிறது
சிங்களவர் மட்டும்
போய்வருகிறார்கள்
அரசமரம் வளர்கிறது
நிச்சயமாய்
எங்களுக்கு நிழல் தராது 

செவ்வாய், 17 ஜனவரி, 2012

எத்தனை அழகுகளை உலகு வைத்திருந்தாலும் -------





அழகு அழகானது
நேரம் மாறவும் அழகானது
இரசனைகளில் அழகு தொங்கி நிற்கிறது
உலகம் விதம் விதமான
அழகுகளை பொத்தி வைத்திருக்கிறது
எத்தனை அழகுகளை
உலகு வைத்திருந்தாலும்
மன அழகே நிகரற்றது 

வீரர்களை விதைத்த மண்ணில் ஏன் இந்த அவலம் ?



சொந்த ஊருக்கு
நாம் போக முடியாது
வாழ்ந்த ஊர் நாராய்க்கிடக்கிறது  
அடித்தவனும்,உதவிய அடிவருடியும்
கூட்டாய் வருகிறார்கள்
புதினம் பார்க்கிறார்கள்
குசலமும் விசாரிக்கிறார்கள்
எங்களில் அக்கறை உள்ளவர் போல்
நாடகமும் வேறு
விலை போனவரால்
விலை பேசப்படும் கொடுமை
கடவுளே ! ஏன் இந்தக்கொடுமை ?
வீரர்களை விதைத்த மண்ணில்
ஏன் இந்த அவலம் ? 

எங்களுக்கு எல்லாம் கனவுதான்



பறவைகள் போல்
என் எண்ணங்கள் பறக்கின்றன
சிதறுகின்றன
தினம்
கை கால் அற்றவரை
தரிசிக்கும் வாழ்வு
கூடவே
வீதிகளில் அந்நியரையும்
கோடரிக்காம்புகளையும் .
முடிக்கப்படா கணணி அறிவுடன்
வேறு என்ன செய்ய முடியும்?
நம்பிக்கை துரோகர்களை
தாண்டிச்செல்கையில்
அந்நிய தேச ஆசையும் வருகிறது
எங்களுக்கு எல்லாம் கனவுதான்  

தேற்ற மனிதன் இல்லையா?



பறக்கும் திசை ஏது?
இங்கிருந்தவர் எங்கே?
யாரையும் நம்பமுடியாதா?
பச்சை வயல்களை களவாடியது யார்?
தினமும்
எல்லாமுகங்களையும்
பார்த்துச் செல்கிறோம்
தெளிந்த முகங்கள்
எப்படி இப்படியாகின?
தேற்ற மனிதன் இல்லையா?
எதுவும் புரியாத கானல் நீரா?
குடிக்க என்ன செய்வது?

திங்கள், 16 ஜனவரி, 2012

எந்தக்கப்பலும் தாழும்



எந்தக்கப்பலும் தாழும்
உயிர்களின் விலைகள்
எந்த நேரமும் மலியலாம்
காலம் நிரந்தரமில்லை
நினைப்பதை விட
நினையாததே நடந்து முடிகிறது.
மனிதம்,விடுதலை ,அன்பு மட்டும்
தாழாமல் வாழும்
கடல் நீரில் மட்டுமல்ல
கண்ணீரிலும்    

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கலோ பொங்கல்



தமிழரின் தனித்துவ விழா தைப்பொங்கல்
யார் தமிழன்?
சுயநலத்துள் சுருங்கிக்கிடப்பவனா?
காட்டிக்கொடுக்கும் பச்சோந்தியா?
விடுதலைக்கு உயிர் தந்தவனா?
யார் தமிழன்?
என் ஊர் பாதுகாப்பு வலயத்தினுள்
எமக்கோ பாதுகாப்பு இல்லை
சொந்த வீட்டில் பொங்கி ,சுற்றத்துடன்
இணைய வழி இல்லை
பொங்கலோ பொங்கல்
கோடரிக்காம்பு அமைச்சரும்,அடிவருடிகளும்
பச்சை பேய்களும்
எம் வீதியில் 
சிரித்து உலாவும் பொழுதில் 
நானோ வாடகை அறையில் ,தனிமையில்
வீதிக்கு வராமல் முடங்கிக்கிடக்கிறேன் 
பொங்கலோ பொங்கல் 


விடியாத தேசத்தில் விழி மூடாது காத்திருக்கிறேன்



விடியாத தேசத்தில்
விழி மூடாது காத்திருக்கிறேன்
விடியும் கனவோடு
விழிமூடிய வீரர் நினைவில்
விழிநீரால் நீர் இறைக்கிறேன்
விழிப்பாயா தமிழா?
விடுதலைக்கு உழைப்பாயா?
என்று கேட்கமாட்டேன்
பானை பொங்கும் போது கூட - நீ
புலியாகி அணிசேராமல் ஒளித்ததால்
பொங்காமல் போயிற்று
தமிழர் வாழ்வு.  

வெள்ளி, 13 ஜனவரி, 2012

நாயே கவலைப்படாதே!



நன்றியுள்ளது நாய்
நன்றி அற்ற மனிதர் உலகில்
நாயும் பியர் குடிக்கிறது
அந்த மனிதர்களை நினைத்து
நாயே கவலைப்படாதே!
நல்லவர்களும் வாழ்கிறார்கள் 

உன்னைக்காப்பாற்ற என்னைக்காப்பாற்றுவேன்



தாயுமில்லை தந்தையுமில்லை
உனக்கு நானும் எனக்கு நீயும்தான்
பிச்சை எடுத்தாவது உன்வயிறை
எப்படியும் நிரப்புவேன்
என் வயிறாய் என் செய்வேன் ?
நீர் நிரப்பி
எத்தனை காலம் வாழ்வது?
உன்னைக்காப்பாற்ற
என்னைக்காப்பாற்றுவேன்
நான் வளரும் வரை
கிடைப்பதை உண்!
ஆசை அண்ணனுக்காய்--   

நலிந்தவருக்காய் வாழ யார் வருவார்?



மனச்சாட்சி உள்ளவர் போல்
வேசமிடும் மனிதரால்
மனிதம் நசிக்கப்படுகிறது.
இனமத சாதி பேதமற்ற வாழ்வு
எப்போது கைகூடும்?
உண்மைக்காய் வாழாதவன்
வாழத்தகுதி அற்றவன்
பச்சோந்தி வாழ்வு கீழானது
பகட்டு வாழ்வு முடமானது.
நலிந்தவருக்காய்
வாழ யார் வருவார்?

செவ்வாய், 10 ஜனவரி, 2012

ஈழமே தூக்கில் தொங்கும் மனநிலையில்



ஈழமே
தூக்கில் தொங்கும் மனநிலையில்
யாருமே
நடப்பாட்சியில்
நம்பிக்கையுடன் இல்லை
அடிவருடிகளைத்தவிர -இவர்களோ
எரியும் வீட்டில்
கூரை பிடுங்குகிறார்கள்
எத்தனை நாள் கழியும்
கத்தி முன் வாழ்வில்
உலகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது
இந்த ஜனநாயகத்தை.

திங்கள், 9 ஜனவரி, 2012

மன்னிக்க முடியா குற்றம் தொடர்கிறது

ஒட்டுக்குழுக்களால்
அரசு உலகமட்டத்தில்
நல்ல பெயர் வாங்குகிறது
பலம் பெறுகிறது.
எல்லா அநியாயம் செய்தும்
தமிழர்களும்
ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்
என காட்டுகிறது .
கோடரிக்காம்புகளின்
மன்னிக்க முடியா குற்றம் தொடர்கிறது.


  

"மலரன்னை " தமீழீழம் தந்த சிறந்த எழுத்தாளார்களில் ஒருவர்

"மலரன்னை " தமீழீழம் தந்த சிறந்த எழுத்தாளார்களில் ஒருவர் .  இவர்
தன் இளமைக்காலத்தில் புகைப்பட கலைஞராகவும்,ஓவியங்கள்
வரைவதிலும் சிறந்து விளங்கினார்.இவர் ஒரு ஹோமியோபதி
மருத்துவராக இருந்தபோதும் தையல் கலையில் வல்லவர்.
                               இவரது எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள்
பல்வேறு பத்திரிகைகள்,வானொலிகளில் வெளியாகி வரவேற்பு
பெற்றன.இவரது முட்பத்தைந்திட்கும் மேற்பட்ட நாடக எழுத்துருக்கள்
புலிகளின் வானொலியில் ஒலிபரப்பாகி பலத்த வரவேற்பை
பெற்றன.இவரது நாற்பத்தைந்து அங்கங்களைக் கொண்ட
வானொலி நாடகம் ஓன்று புலிகளின் குரல் வானொலியில்
தொடராக ஒலிபரப்பாகி அமோக வரவேற்பை பெற்றது.இவரது
பத்து ஆங்கிலக்கவிதைகள் Hotspring பத்திரிகையில் வெளியாகி
பலரின் கவனத்தையும் ஈர்த்தது.இவர் சில மொழிபெயர்ப்புகளையும்
செய்துள்ளார்.இவரின் நாவல் எழுத்துரு ஈடாக பல வெளிவரா
ஆக்கங்கள் போரிடத்தில் அழிந்து போய்விட்டன.
                               இவரது சிறுகதைகள்,நாடக எழுத்துருக்கள்
இருபத்தி மூன்றுமுறை பரிசு பெற்றுள்ளன.சிறுகதைக்காக
ஒருதடவையும்,நாடக எழுத்துருவிற்காக இரு தடவையும்
அகில உலக ரீதியில் பரிசு பெற்றுள்ளார்.இவர் தமீழீழ தேசியத்
தலைவரிடம் பரிசு பெற புலிகளின்குரல் வானொலிக்கூடாக
தேர்வு செய்யப்பட்டும் சுகயீனம் காரணமாய் அதை பெற
முடியாமல் போயிற்று.தேசியத்திற்கு உண்மையாய்
உழைத்தமைக்காய் அவரும் அவரின் எழுத்துக்களும்
என்றும் நினைவு கூறப்படும்.